தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது. இந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கடந்த 5 ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த 6 ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் நேற்று கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வருகிறது.
நல்லூர், கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை கடந்தது. பாலக்காடு சாலையை கடந்த யானை, மதுக்கரை வனப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சாலையில் யானை வருவதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம பகுதிக்குள் காட்டு யானையின் நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வருவதாகவும், யானை நடமாட்டம் குறித்து கிராமங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜமீன் களத்தூர், கிணத்துக்கடவு,காளியபுரம், நல்லிகவுண்டன்பாளையம் வழுக்குபாறை, முத்து கவுண்டனூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளை கடந்து கோவை மாநகர பகுதிகளை அடைந்தது. குனியமுத்தூர் அருகேயுள்ள செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை சுற்றித் திரிந்தது. இதனிடையே சேலம் - பாலக்காடு புறவழிச்சாலையை கடந்த மக்னா யானை, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிக்கிற்குள் நுழைந்தது. இதையடுத்து குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். யானை தற்போது கிருஷ்ணா கல்லூரி பின்புறம் உள்ள செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள புதர்மண்டிய பள்ளத்தில் நின்று கொண்டிருக்கிறது.
இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜலாலூதீன் கூறுகையில், "தந்தம் இல்லாத ஆண் யானையான இந்த மக்னா யானை தற்போது வரை 140 கி.மீ.தூரம் வரை பயணித்து நடந்து வந்துள்ளது. பல கிராமங்களை கடந்து நகர பகுதிக்கு வந்துள்ளது. மாலை நேரத்தில் வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த யானையால் மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. யாரையும் தொந்தரவு செய்யவில்லை. மனிதர்களை பார்த்து பழகிய இந்த யானையின் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஊருக்குள் நுழைந்துள்ளது. தற்போது வழி தெரியாமல் நகர பகுதிக்குள் சுற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்.