கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. கிராம பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து ஒரே பகுதியில் சுற்றித் திரிந்து பயிர் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பர். குறிப்பாக பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பிடிக்கப்படும் காட்டு யானைகள் விடப்படுவது வழக்கம்.
இதேபோல தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது. இந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கடந்த 5 ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த 6 ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வருகிறது.
நல்லூர், கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை கடந்தது. பாலக்காடு சாலையை கடந்த யானை, மதுக்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சாலையில் யானை வருவதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம பகுதிக்குள் காட்டு யானை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வருவதாகவும், யானை நடமாட்டம் குறித்து கிராமங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்