கோவை சௌரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி மோகனசுந்தரம் என்பவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை ராமநாதபுரம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் விஜயம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அஸ்வினி என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியில் குணா மற்றும் இராமு என்ற இரு தொழிலாளர்களுடன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென விஷவாயு வெளியேறவே மோகனசுந்தரம் மற்றும் அவளுடன் வந்த குணா, ராமு என மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்த அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மூவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மோகனசுந்தரம் உயர்ந்தார்.  


மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இந்த பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே உயிரிழந்த மோகனசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் உரிய நிவாரண வழங்கப்பட வேண்டும் எனவும், அவரது மனைவிக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் எனவும் குடும்பத்தினரும், திராவிடத் தமிழர் கட்சி அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்திய அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர்  வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.