இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் ; வணிக வளாகமாக மாறும் டிலைட் தியேட்டர்!

கடந்த 1914ஆம் ஆண்டில் கட்டப்பட்டு இந்த திரையரங்கில், முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கம் தான் தென்னிந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நிரந்தரமான திரையரங்கமாகும்.

Continues below advertisement

தென் இந்தியாவின் முதல் சலனப்படக் காட்சியாளர் என்ற பெருமைக்குரியவர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். ஒரு பிரெஞ்சுக்காரரிடம் இருந்து பெற்ற தன் நவீன படக்காட்சி கருவியுடனும், துண்டு படச் சுருள்களுடனும், இந்தியா முழுக்கப் பயணம் செய்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தனது சலனப்படங்களை காட்டி வந்தார். பிறகு, கோவையில் ஒரு நிரந்தர கொட்டகை ஒன்றை கட்டினார். அது தற்போது வெரைட்டிஹால் சாலையில் அமைந்துள்ள டிலைட் தியேட்டர் ஆகும். அதன் பழைய பெயர் தான் வெரைட்டி ஹால் என்பதாகும். அப்பெயரிலேயே அந்த சாலை அழைக்கப்படுகிறது.

Continues below advertisement

இந்த திரையரங்கம் தான் தென்னிந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நிரந்தரமான திரையரங்கமாகும். கடந்த 1914ஆம் ஆண்டில் கட்டப்பட்டு இந்த திரையரங்கில், முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. மின்சாரம் இல்லாத அந்த காலகட்டத்தில் வின்சன்ட் சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து ஒரு ஆயில் இஞ்சினை தருவித்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து திரையரங்கை இயக்கினார். அந்த மின்சாரத்தை கொண்டு திரையரங்கம் இருந்த வெரைட்டி ஹால் சாலை முழுவதும் மின்விளக்குகளால் ஒளிர செய்தார்.

நூற்றாண்டை தாண்டிய திரையரங்கம்

பிரிட்டிஷ் இந்தியாவின் ரயில்வே துறையில் வரைகலை நிபுணராக வின்சன்ட் சாமி கண்ணு பணியாற்றி வந்த போது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனது நண்பர் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி செய்துள்ளார். அதற்கு கைமாறாக அவர் தன்னிடம் இருந்த பிலிம் ப்ரொஜெக்டர் கருவியுடன் சில படச்சுருள்களையும் கொடுத்து விட்டு சென்றார். ஆரம்ப காலகட்டத்தில் அந்த ஃபிலிம் ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் திரை கட்டி படங்களை திரையிட்டு வந்தார். இதில் நல்ல வருவாய் கிடைக்க கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் நிரந்தர திரையரங்கை கட்டினார். இப்படித்தான் கோவைக்கு முதல் நிரந்தர திரையரங்கம் வந்தது. 1950 ஆம் ஆண்டு இந்தத் திரையரங்கம் வேறொரு நபருக்கு விற்கப்பட்ட நிலையில் வெரைட்டி ஹால் என்ற பெயர் டிலைட் என மாற்றம் செய்யப்பட்டது.


எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் என திரை ஜாம்பவான்களின் தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்கள் டிலைட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டன. கோவையின் வரலாற்றுச் சின்னமான இந்த திரையரங்கம் ஒரு நுாற்றாண்டை கடந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்  எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த திரையரங்குகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் நவீன வசதிகளாலும் இன்றைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டியிட முடியாமல் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றம் கண்டுவிட்ட நிலையில், டிலைட் திரையரங்கமும் இதிலிருந்து தப்பவில்லை.

இங்கு பழைய படங்கள் மட்டுமே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க நிர்வாகம் கூறிவந்த நிலையில் தற்போது வணிக வளாகம் கட்டுவதற்காக திரையரங்கை இடிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து வெரைட்டி ஹால் திரையரங்கின் அருகே கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் என்பவர் கூறும் போது, வரலாற்று பொக்கிஷமான டிலைட் திரையரங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. பாபி என்ற இந்தி படம் எப்போது இங்கு திரையிட்டாலும் 50 நாட்களைக் கடந்து ஓடும். ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இங்கு 100 நாட்களைக் கடந்து ஓடி இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தினங்களில் எப்போதும் அரங்கு முழுவதும் நிறைந்திருக்கும். தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கம் என பெயர் பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடம் இப்போது எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இனி இந்தக் கட்டிடம் மக்கள் பார்வைக்கு இல்லாமல் விடை பெறுவதுடன் வணிக வளாகமாக மாறுவது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola