கோவையில் நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோருக்கு சொந்தமான 229 கோடி ரூபாய் மதிப்புடைய உபரி நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலை, கொடிசியா அருகில் 10 புல எண்களின் கீழ் 45.82 ஏக்க புஞ்சை நிலங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்தம் மற்றும் உச்ச வரம்பு சட்டத்தின்படி உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் கடந்த ஏழாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அந்த நிலங்களை மீட்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த நிலங்களை மீட்கக் கூடிய பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர். 


229 கோடி ரூபாய் மதிப்புடைய இடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை நட்டனர்.  மீட்கப்பட்ட இடத்தில் 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடு பா.ஜ.க கோவை மாவட்ட பாலாஜி உத்தம ராமசாமிக்கு சொந்தமான வீடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள 20 வீட்டு மனைகளை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் விற்பனை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இடங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டார அளவிலும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து பதிவேடுகள் பெற்று சரிபார்ப்பதுடன், அவர்களுக்கு உரிய அறிவுரையும் வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. நில உச்சவரம்பு என்பது தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப்படுத்தும் முறைக்கு ஏதுவாக 1958-ல் இந்திய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டது. வேளாண்மையைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் இந்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 15 ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கெடுப்பதுடன் குடும்பத் தலைவரைத் தவிர்த்து மனைவிக்கு 5 ஏக்கர், மகனுக்கு 5 ஏக்கர், மகளுக்கு 5 ஏக்கர் என ஒரு குடும்பத்துக்கு மொத்தம் 30 ஏக்கர் மட்டுமே இருக்க வேண்டும். அதற்குமேல் இருந்தால் அவை உபரி நிலமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.