கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரும்பு கம்பிகளை திருட முயன்றவரை காவலாளிகள் தாக்கியதில் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கோவை - அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்ற ராஜா, அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அந்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ராஜாவை பிடித்து விசாரித்தாகவும், அப்போது அவரை காவலாளிகள் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜா மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை செக்யூரிட்டிகள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜாவின் குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவை கொலை செய்து விட்டதாகவும் மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.


இது குறித்து பேசிய ராஜாவின் மனைவி சுகன்யா கூறும் போது, அந்த மருத்துமனைக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறி விட்டு ராஜா சென்றதாகவும், ஆனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் எதற்காக இந்த வழியில் வந்தாய் என்று எனது கணவரை கடுமையாக தாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மூன்று பேர் போலீஸ் என பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்து விசாரித்து, தன்னை புகைப்படம் எடுத்து சென்றதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று தாங்கள் போராடியதாகவும், பின்பு தான் தனது கணவர் இறந்து விட்டார் என்று எங்களிடம் கூறியதாக தெரிவித்தார்.


மேலும் வீட்டிற்கு வந்த 3 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம், அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார். ராஜா மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும், ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் திருட முயன்ற போது தாக்கியதால் உயிரிழந்து இருப்பதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜா உயிரிழப்பிற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவனை காவலாளிகள் தாக்கியதில் திருட முயன்றவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.