கோவை மாவட்டம் வாளையார் பகுதியாக செல்லும் சேலம் - கொச்சின் புறவழிச்சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நவக்கரை பகுதியில் உள்ள நந்தி கோயில் அருகே புறவழிச்சாலையில் கடந்த 22ம் தேதி தங்கம் என்ற லாரி ஓட்டுநர், லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆண் ஒருவர் பெண் மாதிரி கவுன் அணிந்து இருந்த நிலையில், டார்ச் லைட் அடித்து லாரியை நிறுத்தி பெண் இருப்பதாகவும், உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதேபோல அதற்குப் பின்னால் வந்த லாரி ஓட்டுநர் பிரபு என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு லாரி ஓட்டுநர்களும் பைபாஸ் ரோட்டில் லாரி ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி சர்வீஸ் ரோட்டிற்கு சென்றுள்ளனர்.


5 பேர் கும்பல் கைது


அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தங்கம் என்பவரிடம் 2,500 ரூபாயையும், பிரபு என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாயையும் வழிப்பறி செய்துள்ளனர். அதில் தங்கம் என்பவர் பணம் கொடுக்க மறுத்ததால் முகத்தில் கையால் தாக்கியுள்ளனர். இது சம்மந்தமாக ஓட்டுநர் தங்கம் கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். இதில் கோட்டூர் பகுதி சேர்ந்த சபரீஷ் (25), குரு பிரகாஷ் (21), நாகராஜ் என்கிற நவீன் (26), சூர்யா (19) மற்றும் சிவா(24) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் வருவது போன்று டார்ச் லைட் அடித்து லாரிகளை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


2.5 கிலோ கஞ்சா பறிமுதல்


கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை குறைக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சூலூர் காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷம்சாத் (39) மற்றும் ஜெய் நாராயணன்மஹ்தோ (39) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த சம்பத் என்கிற தம்பன் (48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம்  கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் கடந்த 1 ம் தேதி முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 63 நபர்கள் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 87.245 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.