கோவை வாலாங்குளம் பகுதியில் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி இரவு கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலியல் செயற்பாட்டாளர்கள், குளக்கரையில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சூழலியல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம் கூறுகையில், ”வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்கிற செய்தி அதர்ச்சி அளிக்கிறது. கோவை வரும் வலசைப்பறவைகளின் புகலிடங்களில் முதன்மையானது வாலாங்குளம். நகரின் நடுவே சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்திற்கு நொய்யல் நீரே ஆதாரம். ஆண்டு முழுதும் இங்கு தேங்கும் நீரால் அருகில் உள்ள பகுதிகளில் நிலையான நீர்மட்டம் குறையாமல் உள்ளது.


சதுப்பு நிலங்களையும் - அவற்றின் உயிர்ச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்று நீதிமன்றங்கள் அறிவுறுத்தி வந்தாலும், வாலாங்குளத்தில் பத்திற்கும் மேலான மின் கோபுரங்கள் அரை ஏக்கர் நிலத்தை விழுங்கி விட்டது. கழிவு நீரும், நகரக்குப்பைகளும் குளத்தின் சிறப்பு விருந்தினர்கள். இதுவெல்லாம் போதாது என்று வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகத்திடம் அகப்பட்டுக்கொண்டது பெரும் துயரம். கரையோரம் இருந்த நீர்தாவரங்களை வேருடன் பிடுங்கி எறித்து விட்டு கான்கிரீட் தளமாக மாற்றியதே நீர்ச்சூழலின் இருப்புக்கு எதிரானது என்று அறியவில்லை எழிலார்ந்த நகரம்.




ஆங்கிலப்புத்தாண்டை ஸ்மார்ட் சிட்டியுடன் கைகோர்த்து ’டிரயும்ப் எக்ஸ் பெடிஷன்ஸ்’ என்ற பெரு நிறுவனமும் ஆங்கிலப்புத்தாண்டை வாலாங்குளத்தில் நடத்துகின்றன. சீனாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்று தடை செய்யப்பட்ட ஹீரியம் என்ற எல்.இ. டி பல்புகளுடன் மிதக்கும் 20 ஆயிரம் பாலூன்கள், ஒளி உமிழும் 300 ட்ரோன்கள், ஸ்கை லேண்டர்ஸ் எனப்படும் இரவை பகலாக்கும் பேரொளி வண்ண விளக்குகள், சின்னத்திரை நட்சத்திரங்களின் கேளிக்கைகள், விதவிதமான உணவகங்கள் என்று கலைகட்டும் ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சி நிரல் ரொம்பவும் ஆர்ப்பாட்டமானது. செயற்கை பேரொளியில், பெருங்கூச்சலில் அச்சமுறும் உயிரினங்கள் குளத்தை விட்டு வெளியேறும்.


நமது ஒருநாள் கொண்டாட்டத்திற்காக, வெகு தொலைவில் இருந்து இங்கு மூன்று மாதங்கள் வாழ வரும் வலசைப்பறவைகளை ஒரு முறை இடையூறு செய்து விட்டால் பிறகு அவைகள் திரும்பி வருவது கடினம் என்கிறார்கள் இயற்கையாளர்கள். எல்லா உயிர்களும் இன்பம் எய்தும் விழாக்களை கொண்டாடி மகிழ்வோம். வனப்பகுதி, நீர்நிலைகளில் இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஓசை சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை வாலாங்குளத்தில் 300 ட்ரோன்கள் பறக்க விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,000 எல்.இ.டி விளக்குகளுடன் ஒலி ஒளி காட்சிகளும் நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. குளம் என்பது நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம் என்பதை அறிவீர்கள். குறிப்பாகப் பறவைகளின் இருப்பிடம் பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் நமது வாலாங்குளம் பல அரிய பறவைகளின் வாழ்விடமாக விளங்குகிறது இக்குளத்தை, கூழைக்கடா, குளத்து நாரை, நத்தை கொத்தி, உப்பு கொத்தி, உள்ளான், இராக் கொக்கு, வண்ண நாரை, பாம்பு தாரா உள்ளிட்ட சுமார் 100 வகையான பறவைகள் பயன்படுத்துவதாகப் பறவை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.




மேலும் இங்கு உப்புக் கொத்தி, நீல வால் பஞ்சுருட்டான் ஆகிய பறவைகள் தொலைதூர நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலங்களில் இங்கு வலசை வருகின்றன. அவ்வகையில் எண்ணிறந்த வகைப் பறவைகள் வலசை வரும் காலம் இது. உலக அளவில் 49 விழுக்காடு பறவை வகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் ஆழமற்ற பகுதிகளிலும் கரைகளிலும் வாழும் பறவைகள், வலசை பறவைகள், வேட்டையாடும் பறவைகள் ஆகியவை பெருமளவில் குறைந்து வருவதாக அறியப்படுகிறது. இவ்வகைப் பறவைகளில் பலவும் வாலாங்குளத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. குளக்கரையில் உள்ள மரங்கள் பல விதமான பறவைகளுக்கு இரவு நேர இருப்பிடமாக விளங்குகிறது. இந்தச் சூழலில் ட்ரோன்கள் பறக்க விடப்படுவதும், காதைக் கிழிக்கும் ஒலி கண்ணைப் பறிக்கும் ஒளி யை எழுப்புவதும் பறவைகள் என்ற எளிய உயிர்களைத் துன்புறுத்தும் செயலாகும். எனவே, புத்தாண்டுக் கொண்டாட்டம் என்கிற பெயரில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட செயல்களை நமது குளக்கரைகளில் அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.