நீலகிரி மாவட்டம் உதகையில் மாதம் தோறும் நடைபெறும் உதகை நகரமன்ற கூட்டம் இன்று வழக்கம் போல் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை குறித்து பேசினர். அப்போது உதகை நகராட்சி சந்தை இடிக்கப்பட்டு, மாற்று இடத்தில் வியாபாரிகளுக்கு கடை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக நகர மன்றத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழக அரசால் உதகை நகராட்சி சந்தை 36 கோடி மதிப்பீடு மல்டி லெவல் பார்க்கிங்கோடு அமைக்கப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாடாளுமன்ற உறுப்பினரையும் அமைச்சரையும் சுட்டிக்காட்டி குறை கூறி வருவதாக தெரிவித்தார். மேலும் பாராட்ட மனமில்லை என்றால் விட்டு விடுங்கள் ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்? அது அரசுக்கு இது  மிகப்பெரிய அவப்பெயர் என்றார்.


அப்போது 18வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் கூடுதலான கடைகள் இல்லை, வியாபாரிகளை அழிப்பது தான் வளர்ச்சியா என கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக துணைத் தலைவர் ரவி நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி என்றால் உங்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும்? உங்களுக்கான கடைகள் அங்கு கிடைக்கவில்லை என்ற ஒரே நோக்கில் குறை கூறுவதா என பேசியதற்கு,  கவுன்சிலர் நீ கமிஷன் பெற்று அந்த வேலையை செய்கிறாய் எனக் கூறினார். அதற்கு நகர மன்ற துணைத் தலைவரும், கவுன்சிலரும் நீ தான் வாங்கி இருப்பாய், நீதான் வாங்கி இருப்பாய், என ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி கொண்டனர்.




ஒரு கட்டத்திற்கு மேல் நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் திமுக கொண்டுவரும் வளர்ச்சித் திட்ட பணியை திமுககாரனே தடுக்கின்றான் இது கேவலமாக உள்ளது எனக் கூறினார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. ஆளும் திமுக கட்சியை சேர்ந்த இரு வார்டு உறுப்பினர்களும் மாறி மாறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. பின்னர் இருவரையும் மற்ற நகர மன்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்தனர்.


இதேபோல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மன்ற கூட்டத்தில் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறபடுத்தாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு  ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். அதற்கு நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. அதிமுக கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 17 வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் விஜியலட்சுமி அகியோர் மீது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதனையடுத்து நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சனை முடிவுக்கு வராததால் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட 11 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக என கூறிவிட்டு சென்றார். இதனால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர்கள்  ஒன்பது பேரும் திமுக கவுன்சிலர்கள் குண்டர்கள் போல நடந்துகொள்வதாக கூறி மன்ற கூட்டத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.