கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.


கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.


இந்நிலையில் சார்ஜாவிலிருந்து நேற்று காலை கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அந்த விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திகிடமான வகையில் தங்கத்தை கடத்தி வந்த நான்கு பேரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டுகளிலும், உள்ளாடைகளிலும் மறைத்து வைத்து சுமார் 3.03 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.09 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன், மற்றும் சென்னையை சேர்ந்த சேஷ் முகமது என்ற இருவரை கைது செய்தனர். இது தொடர்பாக இருவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்க கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண