இ.எம்.ஐ என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணத்தை வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு வாங்கிய கடன் தொகையை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரை செலுத்த வேண்டும். இதில் திருப்பி செலுத்த வேண்டிய அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்தே, இ.எம்.ஐ மூலம் வசூலிக்கப்படும். அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து விருப்பமான கால அளவிற்கு ஏற்ப சரிசமமாக பிரிக்கப்படும். எவ்வளவு மாதங்கள் என தேர்வு செய்து, அவ்வளவு மாதம் பணத்தை தொடர்ந்து திரும்ப செலுத்த வேண்டும். நிலம், வீடு, வாகனம், செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க முழு தொகையை செலுத்த முடியாதவர்கள், குறிப்பிட்ட ஒரு தொகையை கட்டி விட்டு, கடனில் அதனை வாங்கிய பின்னர் இ.எம்.ஐ. முறை மூலம் மாதம் மாதம் பணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் வாங்கலாம் என்ற இறைச்சி விற்பனையாளரின் முயற்சி கவனத்தை ஈர்த்து வருகிறது.




கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் குனியமுத்தூர் பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை செய்து வருகிறார். இவர் இ.எம்.ஐ. முறையில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன், மட்டன் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இது குறித்து இறைச்சி விற்பனையாளர் ரியாஸ் அகமது கூறுகையில், “ குனியமுத்தூர் பகுதியில் அல் அமீன் மட்டன், சிக்கன் இறைச்சிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். பல எலக்ட்ரானிக் கடைகளில்  கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் இஎம்ஐ ஆப்ஷன் கொடுத்து வருகிறார்கள். பொதுவாக மொபைல், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை வாங்க இ.எம்.ஐ. வசதி கொடுத்து வருகிறார்கள். அதனால் மட்டன், சிக்கன் ஆகிய இறைச்சிகளுக்கு ஏன் இ.எம்.ஐ. கொடுக்க கூடாது என நினைத்தேன்.


குறிப்பாக சாமானிய மக்கள் ஒரு பெரிய நிகழ்ச்சிக்காக இறைச்சி வாங்கும் போது ஒரு பெரிய தொகை செலவு ஆகும். இதனை  இ.எம்.ஐ மூலமாக இறைச்சியை கொடுத்தால் அவர்கள் பாரமின்றி கட்டுவார்கள். கறிக்கடை வரலாற்றில் மட்டன் மற்றும்  சிக்கன் 5000 மேல் வாங்கினால் இ.எம்.ஐ. கட்ட மூன்று மாதம் ஆறு மாதம் ஒன்பது மாதம் 12 மாதம் என மாதத்தவணை முறையில் கொடுத்து வருகிறோம். மூன்று மாதத்திற்க்கு இண்ட்ரெஸ்ட் தொகை  170 ரூபாய் ஆகும். கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்காக 500  முதல் 700 கிலோ வாங்கினால் நடுத்தர மக்கள் இதுபோன்று இ.எம்.ஐ மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.  ரம்ஜான் பண்டிகைக்காக மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும்  பொதுமக்களில் நலனுக்காகவே இதனை கொடுத்து வருகிறோம். பொதுமக்களிடையே இந்த இ.எம்.ஐ கட்டணத்தில் இறைச்சி விற்பனையானது நல்ல வரவேற்பு பெரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண