கோவையில் சுவர் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு - கல்லூரி மீது நடவடிக்கை பாயும் - மேயர் உறுதி

”கல்லூரி நிர்வாகத்தின் மீது மாநகராட்சி சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். போன் செய்தால் துண்டிக்கிறார்கள். அலட்சியமாக இருக்கிறார்கள்.”

Continues below advertisement

கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாலை மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்ததில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், நர்கேலா சத்யம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ் கோயாஸ் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சீனிவாசன் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேட்டியளித்த கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், ”இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து சுவர்களுமே இந்த நிலைமையில் தான் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் பொழுது நானும், செயலாளரும் இங்கு வந்து பார்த்தோம். அப்பொழுதே மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது. ஏற்கனவே இருமுறை எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் இந்த நிலைமையில் தான் உள்ளது.

சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது. இருந்தாலும், பலமுறை மாநகராட்சி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றுச்சுவர் கம்பி எதுவுமில்லாமல் வெறும் கற்களை மட்டுமே வைத்து கட்டியுள்ளார்கள். பழனியப்பா நகரில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் கட்டி உள்ளார்கள்” என்றார்.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறும்போது, “கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. அவர்கள் ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு என தெரிவிக்கின்றனர். அனுமதியில்லாமல் கட்டியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இதுவரை யாரும் வரவில்லை. போன் செய்தால் துண்டிக்கிறார்கள். அதிகாரிகள் நாளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். கண்டிப்பாக நிர்வாகம் பதில் சொல்லியாக வேண்டும். காவல்துறையிடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அலட்சியமாக இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் மீது மாநகராட்சி சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி ஆணையாளர், ஆட்சியரிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சி சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement