சுதந்திர தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவையை சேர்ந்த ராஜா என்ற நகைத் தொழிலாளி கண்ணுக்குள் தேசியக் கொடியை வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. நகை தொழிலாளியான இவர், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற கலைப்படைப்புகளை உருவாக்குவது வழக்கம். இந்நிலையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண் விழிகளில் தேசிய கொடியை வரைந்து அசத்தியுள்ளார். சுதந்திர தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண் முட்டை ஓட்டின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும் முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து, அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார்.




இது குறித்து யு.எம்.டி. ராஜா கூறும் போது, “வருடம் தோறும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, பல்வேறு வகையில் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். அதன்படி 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மக்கள் முன்பு ஒரு கலை படைப்பை தர வேண்டும் என சிந்தித்தேன். அப்போது பள்ளி பருவத்தில் படித்த ’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ என்ற வரிகள் மனதில் பதிந்திருந்தது நினைவுக்கு வந்தது. அதை வைத்து கண்ணுக்குள் தேசிய கொடி ஓவியம் வரைய முடிவு செய்தேன். 




அதனை முயற்சிக்கும் போது, பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. கண் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட போது, அவரும் இது போன்று செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கினார். இருப்பினும் அதனை செய்தே முடிக்க வேண்டுமென ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு வாங்கி கொடுத்த சுதந்திர நினைவுகள் என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தது. எனவே மீண்டும் முயற்சி செய்தேன். அப்போது முட்டை ஓட்டில் கருவிற்கு மேல் லேசான படலத்தில் வரையலாமென எண்ணம் தோன்றியது. அதனை எடுத்து அந்த படலத்தை வெட்டி எடுத்து கண்ணில் வைத்த பொழுது அது கண்ணோடு சேர்ந்தது. 




பின்னர் அதில் எனாமல் பெயிண்ட் கொண்டு தேசியக் கொடியை வரைந்து கண்ணில் வைத்தேன். அதுவும் கண்ணோடு ஒட்டியது. இருப்பினும் அது சரியாக ஒட்டாமல் கண்ணிற்குள் சுருண்டு விட்டது. இதுபோன்று 15, 16 முறை தோல்வி அடைந்து அதன் பின் கண்ணில் உள்ள வெள்ளை வெளியில் அதனை வைத்த பொழுது அது மிகச் சரியாக அமைந்தது. அப்பொழுது சுதந்திரம் கிடைத்தது போல் மகிழ்ச்சி அடைந்தேன். அதே சமயம் குழந்தைகள் சிறுவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இது போன்று முயற்சியில் ஈடுபட வேண்டாம்” எனத் தெரிவித்தார். கண்ணுக்குள் தேசியக் கொடியை வரைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண