கோவையில் பி.எம்.டவுல்யூ காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா மற்றும் 2 இலட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவை நோக்கி வரும் ஒரு சொகுசு காரில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்திவரப்படுவதாக சாய் பாபா காலனி காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் செங்கோல் நாதன் தலைமையில் மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் உள்ள சாய்பாபா காலனி மார்க்கெட் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டெல்லி பதிவு எண்ணுடன் வந்த ஒரு பி.எம்.டபிள்யூ சொகுசு காரை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் காரில் வந்த திருப்பூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி வீர சிவகுமார் (55), ஊட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமக நிர்வாகிகள் மீது வழக்கு
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தை பார்வையிட்டு கொண்டிருந்த போது இந்து மக்கள் கட்சி பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோ பதிவிட்டதைப் பார்த்துள்ளார். கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தவறான அவதூறு கருத்துகளை பரப்பும் வகையில் அந்த வீடியோ இருப்பதாகவும், அதனைப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சரவணன் கோவை கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கடை வீதி காவல் துறையினர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்