தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021- 2022 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் தொழில் துறையினர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது குறித்து ஒன்றிய அரசுடன் கலந்து ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்கப்படும். ஒசூர், சேலம், திருச்சி, கோவையை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோவையில் 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் குடியிருப்பு வளாகங்கள் கோவையில் அமைக்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிதிநிலை அறிக்கை குறித்து கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், “திமுக அரசின் முதல் பட்ஜெட்டினை வரவேற்கிறோம். பல பாசிட்டிவாக விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது, வரிகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்தோம். வரி உயர்வு இல்லாத பட்ஜெட்டை எதிர்பார்க்கவில்லை. இதனை வரவேற்கிறோம்.
நாங்கள் கொடுத்த சில கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறி உள்ளது. பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கோவையில் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இ-டெண்டர் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், வெளிப்படைத்தன்மை வருமென எதிர்பார்க்கிறோம். டாக்டர் சுந்தரதேவன் ஐஏஎஸ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருப்பது சிறு, குறு தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவிகரமாக இருக்கும். 15 திறன் மேம்பாட்டு மையம், திருவள்ளுரில் மின்சார வாகன உற்பத்தி மையம் அமைத்தல் உள்ளிட்டவை தொழில் துறை வளர்ச்சிக்கு உதவியாக அமையும்” என அவர் தெரிவித்தார்.
காட்மா சங்கத்தின் தலைவர் சிவக்குமார் கூறுகையில், ”நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டினை முழு மனதுடன் வரவேற்கிறோம். கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறு, சிறு தொழில் முனைவோருக்கு கடனுதவி, கடன் உத்திரவாத திட்டம், மலிவு விலை தங்கும் விடுதிகள், 15 இடங்களில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கது. தொழில் நகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்களுக்கு தனியாக தொழிற்பேட்டை, மலிவு விலை மின்சாரம், நலவாரியம் ஆகிய திட்டங்களை அடுத்து வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
ரயில்வே சப்ளையர்ஸ் அசோசேஷன் தலைவர் சுருளிவேல் கூறுகையில், “இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட் இல்லை. 6 மாதத்திற்கான பட்ஜெட், இது ஓரளவு வரவேற்கத்தக்க பட்ஜெட்டாக உள்ளது. 9 மாவட்டங்களில் சிப்காட்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறுந்தொழில் கூடங்களுக்கு 30 சதவீதம் ஒதுக்க வேண்டும். திறன் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 200 கோடியில் 60 கோடி ரூபாய் ஐடிஐகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானது அல்ல. இதனை அதிகரித்து வழங்க வேண்டும். கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறைவாக உள்ளது. குறுந்தொழில் பேட்டை, அடுக்குமாடி தொழிற்பேட்டை உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.