முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில்  முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லம் அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் மற்றும்  மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லம், மாநகராட்சி  முன்னாள் துணை ஆணையர் காந்திமதி இல்லம், உதவி பொறியாளர் சரவணன் இல்லம், உதவி பொறியாளர் ரவி இல்லம் உள்ளிட்ட  42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநருமான சந்திர பிரகாஷுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இரண்டாவது நாள் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.




இந்நிலையில்  லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான சந்திரபிரகாஷின் கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் செலவில் புணரமைத்து கொடுத்துள்ளதற்கான  ஆவணங்கள் வெளியாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருப்புகளை பொதுப்பணித் துறை மட்டுமே செய்யக்கூடிய இந்த பணிகளை கேசிபி இன்ஜினியரிங் முறைகேடாக புதுப்பித்து தந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தலைமை பொறியாளர் இல்லத்தை கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனம் பல லட்ச ரூபாய் செலவு செய்து புணரமைப்பு செய்து கொடுத்துள்ளது. இதற்காக  கேசிபி இன்ஜினியரிங் நிறுவனம் புணரமைப்பு செய்ய கட்டுமான பொருட்கள் வாங்கிய பில்களில் நகல் வெளியாகி உள்ளது. என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டது? என்னென்ன பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் அதில் உள்ளன.




அரசு கட்டிடங்களை வழக்கமாக  பொதுப்பணித் துறையே சரிசெய்து கொடுக்கும்  நிலையில், கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருப்பை நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளது. வாஸ்து நிபுணர்கள் ஆலோசனையுடன் கே.சி.பி இஞ்சினியரிங் நிறுவனம் புணரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் பல லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளதால், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஒப்பந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் அதற்கான பில் தொகை செட்டில் செய்யப்படும்போது, காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் தலைமை பொறியாளர் இலட்சுமணனுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.