தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021- 2022 ம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தாக்கல் செய்யப்படும் முதல் நிதி நிலை அறிக்கை இதுவாகும். இதன் காரணமாக இந்த நிதிநிலை அறிக்கை குறித்து மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன. இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய வரி விதிப்புகள், விலை உயர்வு இல்லாத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தொழில் நகரமான கோவையில் தொழில் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை தொழில் துறையினர் எதிர்பார்த்து இருந்தன. அதேபோல விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டன. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்ற கோவைக்கான திட்ட அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.
- கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
- கோவையில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்குவது குறித்து ஒன்றிய அரசுடன் கலந்து ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்.
- புதிய பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.
- ஒசூர், சேலம், திருச்சி, கோவையை இணைக்கும் பாதுகாப்பு தொழில் துறை பெருவழிகளை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோவையில் 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும்.
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் குடியிருப்பு வளாகங்கள் முதலில் சென்னை, கோவையிலும், பின்னர் ஏனைய இடங்களிலும் அமைக்கப்படும்.
- திருப்பூரில் டைடல் பூங்கா உருவாக்கப்படும்.
இதேபோல நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரிக் குறைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி, தொழில் மேம்பாடு மற்றும் தொழில் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள், குளங்கள் மேம்பாடு, பாசனத் திட்டங்களுக்கான நித் ஒதுக்கீடு, காடுகளின் பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் உள்ளிட்ட அறிவிப்புகளால் கோவை பயன்பெறும் வகையில் உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.