கோவையில் மீன் வாங்கினால் கால் கிலோ தக்காளி இலவசமாக இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும் என மீன் கடைக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், தக்காளி விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உச்சத்தில் இருக்கிறது. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தக்காளிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. தக்காளி விலை உயர்வின் காரணமாக சில விவசாயிகள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் ஒரே நாளில் மாறிய சம்பவங்களும் நடந்தன. அதேபோல தக்காளி விலை உயர்வால் ஆங்காங்கே தக்காளியைத் திருடிச்செல்லும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. இதனை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. பல்வேறு திருமண நிகழ்வுகளில் மணமக்களுக்கு தக்காளிகளை பரிசாக வழங்கிய சம்பவங்களும் நடந்தன. தக்காளி விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைய ஆரம்பித்து உள்ளது. தற்போது விலை சற்று குறைந்து இருந்தாலும், தக்காளி விலை உயர்வு பலருக்கும் கவலை அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. இதனிடையே சில இடங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கப்படும் என சில கடை உரிமையாளர்கள் அறிவித்தனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் மீன் வாங்கினால் தக்காளி இலவசம் என மீன் கடைக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார்.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வருபவர் ஜாபர். இவர் தனது கடைக்கு மீன் வாங்க வருபவர்களுக்கு கால் கிலோ தக்காளி இலவசமாக வழங்கி வருகின்றார். தக்காளி விலை உயர்வு காரணமாக மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இன்றும், நாளையும் என இரண்டு தினங்கள் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளி இலவசமாக கொடுப்பதாக கடை உரிமையாளர் ஜாபர் தெரிவித்தார். மீன் வாங்கியதற்காக, தக்காளி விற்கும் விலைவாசிக்கு அதை இலவசமாக கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக கடைக்கு வந்த பெண்கள் தெரிவித்தனர். கால் கிலோ தக்காளி இலவசமாக கொடுத்ததால் கூடுதலாக மீன் வாங்கி செல்வதாகவும் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மீன் கடைக்காரரின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.