கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. படுதோல்வி அடைந்துள்ள அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. இதனிடையே மேயர் வேட்பாளராக அறியப்பட்ட 2 பெண் வேட்பாளர்கள் தோல்வியை தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக வேட்பாளராக 7 வது வார்டில் கிருபாலினி கார்த்திகேயன் களமிறக்கப்பட்டார். தேர்தல் துவங்கும் முன்பே மேயர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினரிடையே 38 வது வார்டில் களமிறங்கிய நமது அம்மா நாளிதழ் பதிப்பாளரும் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளா சந்திரசேகர் தான் மேயர் வேட்பாளர் என பேச்சு கிளம்பியது. அதற்கேற்ப விருப்ப மனுவும் கொடுக்காமல், நேர்காணலிலும் கலந்து கொள்ளாத போதும், ஷர்மிளாவுக்கு சீட் வழங்கியது தலைமை. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா சந்திரசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.


 



கிருபாலினி


இதனிடையே தேர்தல் நெருக்கத்தில் காட்சிகள் மாறியது. ஸ்டார் வேட்பாளராக கிருபாலினி மாற, கட்சியினர் வெளிப்படையாகவே கிருபாலினி தான் அடுத்த மேயர் என பேச துவங்கினர். இதற்கேற்ப கோவையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில், ஷர்மிளா அமைதியாக கடந்து போக, கிருபாலினி மேடையேறிய போது, கட்சியினர் உற்சாக குரல் எழுப்பினர். ரியல் எஸ்டேட் அதிபரான இவரது கணவர் கார்த்திகேயன், கோவையில் களமிறங்கிய பெரும்பாலான அதிமுக வேட்பாளர்களுக்கு பலமாக செலவு செய்ததாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது கிருபாலினி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோவிந்தராஜிடம் 861 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தார்.




இதே போல் திமுக சார்பில் 38வது வார்டில் ஷர்மிளாவை எதிர்த்து கட்சியின் சீனியர்களில் ஒருவரான சண்முகசுந்தரத்தின் மனைவி அமிர்தவள்ளி களமிறக்கப்பட்டார். முன்னாள் துணை மேயர் கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி ஆகியோருடன் இவரது பெயரையும் கட்சியினர் மேயர் வேட்பாளராக கருதினர். ஆனால் ஷர்மிளாவிடம் 315 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். கோவை மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றிட திமுக கொட்டிய உழைப்பு இந்த வார்டுக்கு மட்டும் சென்று சேரவில்லை என்பதோடு, சந்திரசேகரின் வலுவான கவனிப்பும் காரணம் எனக் கூறப்படுகிறது. திமுகவில் மேயர் வேட்பாளராக அறியப்பட்ட மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை மாநகராட்சியை திமுக பெரும்பான்மை பலத்துடன் வென்ற நிலையில், நிவேதா சேனாதிபதி, இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு உள்ளிட்டோருக்கு மேயராக வாய்ப்பு உள்ளது.