கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி அசத்தியது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது. போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேசமயம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில், ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி படுதோல்வியை சந்தித்துள்ளது. வெறும் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சையாக களமிறங்கிய எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வென்றது.




கோவை மாநகராட்சியில் பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. 98 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக அனைத்து வார்டுகளிலும் தோல்வியை தழுவியது. அதில் 85 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். 13 வார்டுகளில் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. கடந்த 2011 ம் ஆண்டு கோவை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2 வார்டுகளை வென்ற பாஜக, இம்முறை ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. கடந்த முறை காரமடை நகராட்சியை கைப்பற்றிய பாஜக, இந்த முறை ஒரு வார்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள அனைத்து நகராட்சிகளையும் பாஜக தோல்வியை தழுவியது. 33 பேரூராட்சிகளில் உள்ள 504 பதவிகளில் வெறும் 5 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது. அதிகபட்சமாக செட்டிபாளையம் பேரூராட்சியில் 2 இடங்களில் வென்றுள்ளது. அன்னூர், புலுவப்பட்டி, சிறுமுகை ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.




வலுவான வாக்கு வங்கியை கோவையில் பாஜக கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்ற பகுதிகளை காட்டிலும், கோவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்தார். அது பாஜகவிற்கு கைகொடுத்தாக தெரியவில்லை. அதேபோல வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.