கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையை ஒட்டி கடமான் கோம்பை, குண்டூர், மானாறு, அத்திக்கடவு உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள செம்பாறைபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேத்துமடை என்ற பழங்குடியினர் குடியிருப்பில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வன உரிமை சட்டத்தின் மீழ் செம்பாறைபாளையம், வெள்ளியங்காடு, நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட 26 கிராமங்களில் சமுதாய உரிமை வழங்குவது குறித்து 19 வன கிராம சபை குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.


இக்கூட்டத்தில் வன கிராமத்திற்கு தேவையான அங்கன்வாடி, மருத்துவமனை, பொது வழி, கோவில் நிலம் போன்ற பயன்பாட்டிற்கு தேவையான நிலங்களை வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் கூட்டாக ஆய்வு செய்து சமுதாய உரிமை வழங்கிடவும், வன பகுதியில் வன கிராம மக்களுக்கு மக்களின் பொருளாதாரம் மேம்பட தேன் சேகரித்தல், சீமார் குச்சி எடுத்தல் போன்ற தொழில்கள் செய்வதை ஊக்குவிக்கவும், வன நிலத்தை பாதுகாப்பது குறித்தும் வன கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் வனத்துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் பழங்குடியின மக்களிடம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் வனப் பகுதிகளில் விளையும் பொருட்களை விற்பனை செய்வது குறித்தும், வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பதால் ஏற்படும் வன விலங்குகளின் தொல்லை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பழங்குடியின மக்களிடம் தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதி அளித்தார்.



அப்போது பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனை வரவேற்கும் விதமாக அவர்களது பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து நடனமாடி வரவேற்றனர் .அப்போது பழங்குடியின மக்களின் ஆசைக்கிணங்க அவர்களுடன் இணைந்து ஆட்சியர் சமீரன் பாரம்பரிய இசைக் கருவிகள் இசை முழங்க நடனமாடி மகிழ்ந்தார். இதனை அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண