கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. 58 வயதான இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் அருகே மது அருந்தி கொண்டு இருந்த போது, கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு (21) என்ற இளைஞரும் மது அருந்தியுள்ளார். அப்போது மது போதையில் அங்கு வந்து ஸ்ரீ விஷ்ணு பழனிச்சாமியுடன் பேசி உள்ளார். அப்போது ஸ்ரீ விஷ்ணு பழனிச்சாமியை தற்பாலின  சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ விஷ்ணு பழனிச்சாமியை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றினர். இதையடுத்து ஸ்ரீ விஷ்ணுவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பாலின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த முதியவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதில் இருந்து விலகி தனியாக ஃபைனான்ஸ் நிறுவனம் துவக்கினார்.  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும், சரவண சுந்தரத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி அன்னூரை அடுத்த மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை இந்து முன்னணியில் இருக்கும் தனது நண்பரான ராஜராஜனுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வன் வெட்டிக் கொன்றனர்.

 

ராஜேந்திரன்

பின்னர், தமிழ்ச்செல்வன், ராஜராஜன் இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல் துறையினர் விசாரணையில் சரவண சுந்தரம் தனியாக சிட்பண்ட்ஸ் ஆரம்பித்ததால் இந்து முன்னணியின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் கொலை செய்ய தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரைத்தார்.

இதன் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது.