தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 50 ஐ கடந்து பதிவாகி வருகிறது. இதனால் கொரோனா தொற்று பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாவட்ட நிர்வாகம், பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.


இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமெனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடங்களில் காய்ச்சல் பரிசோதனைகளை செய்யவும், கிருமி நாசினி தெளித்தல் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உருமாறிய வைரஸை கண்டறிய வெளிநாடுகளில் இருந்து நோய் தொற்றுடன் வருபவர்கள் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி தென்படுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திடவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவையில் நேற்றைய தினம் 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. 40 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 288 பேர் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண