கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு! ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல தடை!

ஆற்றின் மையப் பகுதியில் இருக்கும் பாலாற்று கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தின் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

Continues below advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Continues below advertisement

பாலாற்றில் வெள்ளம்:

இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி, வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்ல தடை:

பாலாற்றங்கரையில் ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் உள்ளூர் மட்டும் இல்லாமல், வெளியூரிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக திருமூர்த்தி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் பாலாற்றுக்கு வரக்கூடிய சிற்றோடைகள் வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் மையப் பகுதியில் இருக்கும் பாலாற்று கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தின் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் இவ்வழியாக சென்றால் வழுக்கும் நிலை உள்ளது. இதனால் பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மேலும் நீர்வரத்து குறைந்தவுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தற்காலிக மூடல்:

இதேபோல ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் ஆழியார் அணை அருகே கவியருவி அமைந்துள்ளது. பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் அமைந்துள்ளது கவியருவிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Also Read : நீலகிரி மலை இரயில் சேவை 11ம் தேதி வரை ரத்து! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!

 

Continues below advertisement