கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது, டெலிகிராம் ஐடி மூலமாக வந்த ஒரு லிங்கினுள் சென்றுள்ளார். அப்போது சிறிய டாஸ்க்கள் செய்து கொடுத்து, அதன் மூலம் சிறுதொகை முதலீடாக பெற்றார். இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்து டாஸ்கில் செல்வதற்காக 21  பரிவர்த்தனைகள் மூலம் 23 இலட்சத்து 82 ஆயிரத்து 825 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். இதன்மூலம் அதிக வருமானம் பெறலாம் என்று நம்பியுள்ளார்.


ஆனால் முறையாக பணம் திரும்ப கிடைக்கததால் சந்தேகம் அடைந்துள்ளார். பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து, பணத்தை இழந்ததது ராஜாவிற்கு தெரியவந்தது. இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜா பணம் அனுப்பியவர்களின் வங்கி கணக்குகளில் இருந்த 2 கோடியே 39 இலட்சத்து 57 ஆயிரத்து 280 ரூபாய் பணத்தை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கம் செய்தனர்.


பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




இதேபோல போலியான ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி மனைவியை இழிவு படுத்திய கணவரை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில்  வசித்து வருவதாகவும், தனது கணவர் போலியான ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி, அதில் அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோர் புகைப்படத்தை முகப்புப்படமாக வைத்து ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் அதில் அந்த பெண்ணின் அலைபேசி எண்ணை சேர்த்து பதிவிட்டு வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, அப்பெண்ணின் கணவரான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (32) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கண்ணன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண