Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும், தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார்.

Continues below advertisement

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Continues below advertisement

இதனிடையே மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு சிகிச்சையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்களில் லேசான கிராக் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவர்கள் அவருக்கு மாவு கட்டு போட்டனர். பின்னர் சவுக்கு சங்கரை மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவண பாபு அனுமதி வழங்கினார். இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இன்று மாலையுடன் காலக்கெடு முடிந்ததை தொடர்ந்து, சவுக்கு சங்கரை காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும், தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இதற்கு முன்னதாக இன்று சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 20 ம் தேதிக்கு நீதிபதி சரவணபாபு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement