திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19). பரணி குமார் (21), பிரகாஷ் (24) நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும், 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் ஒன்பது பேர் போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.


17 வயதான சிறுமி ஒருவர் பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்து உள்ளார். 10 ம் வகுப்பு வரை படித்து உள்ள அவர் குடும்ப வறுமை காரணமாக ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இதனால் வேலை தேடி வந்து உள்ளார். அப்போது அருகில் உள்ள ரேஷன் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்த  14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுவன் சிறுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை நம்பிய சிறுமி, சிறுவனுடன் நெருங்கி பழகி வந்து உள்ளார்.


வேலை வாங்கி தருவதாக கூறி பல இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அந்த சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தாகவும், மேலும் தனது நண்பர்கள் 8 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.  இதனிடையே சிறுமியின் தோழியான மற்றொரு 13 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இதில் 17 வயதான சிறுமி கர்ப்பம் அடைந்ததால், இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிறுவன் தற்கொலை முயற்சி


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 இளைஞர்களும் 3 சிறார்களும் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இளைஞர்கள் ஆறு பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மூன்று சிறார்களும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் 17 வயது சிறுவன் ஒருவன் நேற்றிரவு கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி விட்டதாக கூறப்படுகிறது. சிறுவனின் தற்கொலை முயற்சி குறித்து பந்தயசாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)