கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.


தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னணி பலருக்கும் பெரும் அதிர்ச்சிை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.







ஜமேசா முபின்






காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.











 


ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றினர். காவல் துறை செக்போஸ்ட் இருந்ததால் அதை தாண்டி தப்பி ஓட முயன்ற போது சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உபா சட்டம்


இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் முபின் என்ற நபர் தீக்காயங்களுடன் இறந்தார். உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தடயங்களை பாதுகாத்து அறிவியல் பூர்வமாக அனைத்து புலன் விசாரணையும் நடந்து வருகிறது.




12 மணி நேரத்தில் உயிரிழந்த நபரை கண்டறிந்தோம். வெடித்து சிதறிய கார் 10 பேரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது யுஏபிஏ எனப்படும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், உபா சட்டம் ஆகிய பிரிவுகளிலும் 5 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக 20 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சந்தேகப்படும் நபர்களை விசாரித்தும், அவர்களின் வீடுகளை சோதனை செய்தும், அவர்களை கண்காணித்தும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை நடந்த புலன் விசாரணை அடிப்படையில் முபின் காரில் வந்த போது, அப்பகுதியில் காவல் துறை பீட் இருந்ததால் தப்பிச் செல்ல முயன்ற போது சிலிண்டர் வெடித்து இருக்கக் கூடும்.


சட்டம் - ஒழுங்கு


எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு யார், யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் கேரளா சென்று வந்துள்ளார். எதற்காக சென்று வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். யுகங்கள் அடிப்படையில் பல தகவல்கள் சென்று கொண்டுள்ளது. தடயவியல் ரிப்போர்ட் வந்த பின்பு முழுமையாக தகவல் கிடைக்கும்.


கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியுள்ளது. முபின் வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர், 3 கேன் டிரம் உள்ளிட்டவை காரில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் என்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்து தடயவியல் ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். 3 பேர் சிலிண்டர் தூக்க உதவி செய்துள்ளனர். ஒருவர் ஒருங்கிணைப்பு செய்துள்ளார். ஒருவர் காரினை தயார் செய்து தந்துள்ளார். முபின் வீட்டில் இருந்து 75 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.


கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். அதேபோல், தற்போது கோவை மாநகரில் பாதுகாப்பை உறுதி செய்ய புதிதாக 3 காவல் நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.