சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள், நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்டீல், பிக் அயர்ன், ஸ்கிராப், காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மூலப்பொருட்கள் விலை உயர்வினால் பணி உத்தரவுகளை செய்து தர முடியாத நிலை ஏற்படுவதாகவும், பல தொழிற்கூடங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொழிற்துறையினர் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும் குறுந்தொழில் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்கள் விலை உயர்வினை கட்டுப்படுத்த கோரி, சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பினர் இன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் பங்கேற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் கொடிசியா, டேக்ட் உள்ளிட்ட 46 அமைப்புகள் பங்கேற்றுள்ளன. கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காரணமாக 1500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இது குறித்து டேக்ட் அமைப்பின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “தங்கம் விலை போல நாளுக்கு நாள் மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மூலப்பொருட்கள் விலை 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்விற்காக கட்டுப்பாடு இல்லாததால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பெரு நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆர்டர் முறையில் குறுந்தொழில் கூடங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வேலை உயர்வால் ஆர்டர்கள் வருவதில்லை. குறுந்தொழில் கூடங்கள் உற்பத்தி நிறுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், மூலப்பொருட்கள் விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்க கோரியும் இன்று ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதும் 25 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பும், கோவையில் 1500 கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்புகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என அவர் தெரிவித்தார்.