திருப்பூர் - பூலுவப்பட்டி சாலையில் உள்ள கே.ஜி.புதூரில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் நான்கு வயது பெண் குழந்தைக்கு கடந்த 14 ஆம் தேதி பள்ளியில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக காவல் துறையிடம் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரினை தொடர்ந்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் துறையினர் பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் நேற்று மாலை  பள்ளியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளியை கைது செய்ய தாமதப்படுத்துவதாகவும் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 




இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவில்  ’அடையாளம் காணக்கூடிய நபர்’ எனும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யவில்லை என குற்றம்சாட்டி குழந்தையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 




அப்போது அவர் கூறுகையில், ”குழந்தையின் பெற்றோர் புகார் அளிக்கும் போதே இதை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை என தான் புகார் கொடுத்துள்ளனர். குழந்தை தற்பொழுது மருத்துவமனையில் இருக்கிறது. குழந்தையின் பெற்றோர் கடந்த 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளி யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது. குழந்தைக்கு குற்றவாளி யார் என்பதை சொல்ல தெரியவில்லை. பள்ளியில் இருந்த 120 சிசிடிவி கேமாரக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். 2 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க குழந்தையின் மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது” என அவர் கூறினார். 




முன்னதாக மாநகர காவல் ஆணையர் வனிதா பேச ஆரம்பித்த போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 4 வயது  குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண்பதில் இருக்கும் சிக்கலை தாண்டி இரு நாட்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று உறுதியை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.