கோவையில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்தார்.
இதன்பின்னர் கோவைக்கு கார் மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். பந்தயசாலை பகுதியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தொழில் துறையினருடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர். கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கோவைக்கு அதிகப்படியான ஆக்சிஜனை ஒதுக்கவேண்டும், ஆக்சிஜன் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்கவேண்டும், கொரோனா சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும், அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதன் பின்னர் கொடிசியா அரங்கத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே 1280 படுக்கைகள் இருந்த நிலையில், கூடுதலாக 253 படுக்கைகளும், சித்தா மருத்துவத்திற்கு 225 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது முதுநிலை மருத்துவ மாணவிகள் உதவித்தொகையை அதிகரித்து வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல தொழில் துறையினரும் தங்களது கோரிக்கை மனுக்களை ஸ்டாலினிடம் வழங்கினர்.
இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி, ஆதித் திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின்னர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் சிகிச்சை மையங்கள் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.