மேட்டுப்பாளையம் அருகே ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு பணம் கொடுத்த  வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் அதிமுகவைச்சேர்ந்த விமலா என்பவர், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க கடும்போட்டி நிலவிய நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 12-வது வார்டு உறுப்பினர் வினோத் குமார் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.


இந்நிலையில் சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் பல குழப்பங்கள் தலையெடுக்க தொடங்கியது. துணைத் தலைவர் வினோத்குமார் மீது வார்டு உறுப்பினர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவருக்கு எதிராக வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டி அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர். 1-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் ஊராட்சி செயலாளரிடம் துணைத்தலைவர் வினோத்குமார் மீது புகார் மனு ஒன்று அளித்தார்.


அதில் கூறியிருப்பதாவது, “ஊராட்சியில் வரி பணங்கள், மனையிட அனுமதி, கட்டிட அனுமதி ,வேலை ஒப்பந்தம் அனைத்திலும் மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன. இவை அனைத்திற்கும் காரணமாக தலைவர் மற்றும் உதவி தலைவர் ஆகியோர் ஊராட்சிக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கப்படும் அனைத்து நிதிகளையும் தங்களது சுய லாப நோக்கத்திற்காக பணம் பரிமாற்றங்களை தவறாகக் கையாண்டு வருகின்றனர். வேலை ஒப்பந்தங்களை உதவித் தலைவர் தன்னிச்சையாக சட்டத்திற்கு புறம்பாக பணிகளை எடுத்து செய்து வருகிறார். கடந்த நிதி குழுவிலிருந்து ஊராட்சிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட ஒரு கோடிக்கு மேல் வந்த தொகையை மற்ற வார்டுகளுக்கு ஒதுக்காமல், உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல், கூட்டங்களை கூட்டாமலும், தீர்மானங்கள் இயற்றப்படாமலும் உதவி தலைவர் தன்னிச்சையாக பணிகளை எடுத்து செய்து வருகிறார். ஆதலால் துணைத் தலைவர் மீது எனக்கும் என்னை சார்ந்த மற்ற உறுப்பினர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக  ஊராட்சி மன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டி கூட்டத்தில் துணைத்தலைவர் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில் மற்ற  வார்டு உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனு தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.



இந்நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு குதிரை பேரம் நடந்தது தெரியவந்துள்ளது. வினோத்குமார் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்க வார்டு உறுப்பினர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஊராட்சி துணைத்தலைவர் வினோத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.