சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (40). அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வந்த இவர், திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் A to Z என்ற நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்தார். இந்த ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக ஆசிரியர் பணியில் இருந்து மணிமாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கிருந்த மணிமாறன் நடன ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜீலை மாதம் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வந்த மணிமாறனை காவல் துறையினர் தேடி வந்தனர். 




 


இதன் இடையே சிறுமியுடன் மணிமாறன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரத்தில் வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போல தங்கி இருந்துள்ளார். அப்போது தான் தங்கிருந்த வீட்டு உரிமையாளரின் 19 வயது மகளையும் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தலைமறைவானார். சிறுமி உட்பட இருவருடன் ஆசிரியர் மணிமாறன் தலைமறைவான நிலையில், கோவை மற்றும் கன்னியாகுமரியில் காவல் துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இருந்த நிலையில், அடுத்தடுத்து இரு பெண்களை மணிமாறன் கடத்தி சென்றது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டது குறித்து மணிமாறன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு 8 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் கன்னியாகுமரி இளம் பெண் தனது வீட்டியினரை தொடர்பு கொண்டு தாங்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை டீ விற்க வைத்து மணிமாறன் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார். தங்களது சூழல் குறித்து தொலைபேசி மூலம் அப்பெண் தெரிவித்த நிலையில், அவர்கள் ஆந்திராவில் இருப்பது தனிப்படை காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து செல்போன் எண்  மூலம் இருப்பிடத்தை கண்டறிந்த காவல் துறையினர் திருப்பதியில் முகாமிட்டு, இரண்டு இளம் பெண்களுடன் தலைமறைவாக இருந்த ஆசிரியர் மணிமாறனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிறுமி உட்பட இரண்டு இளம் பெண்களையும் காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனை கோவை அழைத்து வந்த தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.