கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர் கூட்டம் இன்று துவங்கியது. இதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதையடுத்து காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, ”தென்னிந்திய துணைவேந்தர்கள் கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக அமைய வாழ்த்துகள். தமிழகத்தில் உள்ள பல்கலைகள் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.  தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்குகின்றது. 2020 - 21 தேசிய நிறுவனங்களுக்கான கட்டமைப்பில் தமிழக கல்லூரிகள் முதல் 100 இடத்தில் இருக்கின்றது.




தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்கை 51.4 என இருக்கின்றது. தேசிய அளவிலான சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்பது சாதனை. தொழில் கல்வி, மருத்துவதேர்வு போன்றவற்றில் நுழைவு தேர்வை ஒழித்தது கலைஞர். பெண்கள் சமூக ரீதியாக பொருளாதர ரீதியாக விடுதலை அடைய வேண்டும் என்பது திராவிட இயக்க கொள்கை. பெண்களுக்கு தனி பல்கலை, உதவி தொகை, அகில இந்திய தேர்வுகளுக்கு உதவி தொகை என கல்வியில்  பெண்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது. நிதி நிலை அறிக்கையில் உயர் கல்விக்கு 5369 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி சென்றடையாத இடங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் செனறடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.




உயர்கல்வியில் தாய்மொழி கல்வியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. உயர்கல்வி பாடங்கள் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய உயர் கல்வியின் நோக்கம் அனைவருக்கும் வேலை தரும் கல்வி அவசியம். மார்ச் 1ம் நாள் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைகழக துணை வேந்தர்கள்  அறிவியல் பூர்வமான சிந்தனையை மாணவர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போற்கு கருத்துகளை புகுத்த முயற்சிக்கின்றது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பல்கலைகழகங்கள் செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


பின்னர் பேசிய ஆளுநர் ரவி, ”இங்கே வந்துள்ள துணை வேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள். கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அதே வேளையில் அது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும். அதனால் நாம் அனைவரும்  உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும். இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதை பார்க்க வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.




சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலமாக இருந்தோம். அரசுகள் 5 ஆண்டுகள் தான் இருக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி  ஒதுக்குகிறார்கள் அது அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறது. அதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது. அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை. இதனால் மாநிலங்களுக்கு இடையே சமநிலை இருப்பதில்லை. 2014ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது. செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். 2014ல் 400 புதிய நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் 2022ல் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக உயர்ந்துள்ளது. தற்போது 2047ம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். 2047ல்  நம் இலக்கு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும். இதை வைத்து  துணைவேந்தர்கள் யோசித்து, வேலைக்காக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் பயன்படும் வகையில் திட்டமிடல் செய்ய வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் முனைவர்கள் ஆய்வு கட்டுரைகள் தாக்கல் செய்து இருக்கின்றனர். மாணவர்களின் ஆராய்ச்சி மக்களுக்கும், நாட்டுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். சில தலைவர்கள் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிப்பதால் யாருக்கும் பயனிருக்க போவதில்லை” என அவர் தெரிவித்தார்.




அகில இந்திய பல்கலைகழக கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பல்கலைகழக துணை வேந்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் நிலையான வளர்ச்சி இலக்குகளை உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக உருவாக்கி, அனைவருக்கும் கல்வியை வழங்குவது என்ற இலக்கு குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது. மேலும் கூடுதல் ஆய்வு கட்டுரைகள், முனைவர் பட்டங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நாட்டின் 4 இடங்களில் மண்டல வாரியாக நடைபெற்று முடிந்துள்ள இக்கூட்டத்தில் கடைசி மற்றும் 5 வது கருத்தரங்கு இதுவாகும். இதை தொடர்ந்து மார்ச் 22 முதல் 24ம் தேதி வரை மைசூரு பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.