மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 7 ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் வருகின்ற 31ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி இன்று துவங்கியது. உதகை தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்று துவங்கிய மலர் கண்காட்சி வருகின்ற 24 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
மலர் கண்காட்சியில் 275 மலர் வகைகளை சேர்ந்த 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் இடம் பெற்றுள்ளன. விழாவின் முக்கிய அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் வேளாண் பல்கலைக்கழக கட்டிட முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் 6 பழங்குடி மக்களின் உருவங்கள் கொய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘ஊட்டி 200’ என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டியில் ஓரியடல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, செம்பா, ஆஸ்டர், பால்சம் உள்ளிட்ட மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் மலர்கள் குறித்து கேட்டறிந்தார்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் மலர்களை உற்சாகத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். கோடை விழாவினை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.