முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை இன்று துவக்கியுள்ளார். கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ஸ்டாலினின் உரையை கேட்க கோவையில் சுமார் 300 இடங்களில் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பேசிய மு.க.ஸ்டாலின், “பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்களை வீழ்த்தி, நம்மை மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். ஆட்சி அமைத்து ஓராண்டு முடியும் முன்பே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் முக்கால் பங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது போல, உள்ளாட்சியிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் உள்ளது. காணொலி மூலம் நடைபெறும் முதல் கூட்டமாக இது உள்ளது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக செய்துள்ளார். 300க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கட்சியினர் மற்றும் மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் வேறு, நான் வேறு இல்லை.
விவசாயிகளுக்காக வாழ்நாள் இறுதி வரை உழைத்தவர் நாராயண சாமி நாயுடு. அவரது பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி நடப்பது பொருத்தமாக உள்ளது. பச்சை துண்டிற்கு மரியாதையும், கம்பீரத்தையும் உருவாக்கி தந்தவர் நாராயண சாமி நாயுடு. உழவர்களுக்கு இலவச மின்சாரம், உழவர் வங்கிக்கடன் தள்ளுபடி, கரும்புக்கு உரிய விலை, நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. நாராயணசாமிநாயுடு கனவுகளை நனவாக்கும் ஆட்சி திமுக ஆட்சி. கலைஞர் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்த ஊர் கோவை. வேளாண்மை பல்கலைக்கழகம், பல்வேறு பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு கோவைக்கு தந்துள்ளது. திமுக அரசு கோவைக்கு செய்துள்ள திட்டங்களை நாள் முழுக்க சொல்லிக் கொண்டே இருக்கும். கொங்கு வேளாள கவுண்டர்கள் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்ட பட்டியலில் திமுக அரசு சேர்த்தது. அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு திமுக அரசு தான் வழங்கியது. 10 ஆண்டு ஆட்சியில் இருந்த கட்சியால் இப்படி சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு 52 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 3 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. காந்திபுரம் பகுதியில் 200 கோடி ரூபாய் செலவில் காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்டியல் போதுமா? இன்னும் சொல்ல வேண்டுமா?
8 மாத காலத்தில் இவ்வளவு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. இந்த அரசு கொரோனா பிரச்சனைகளை தாண்டி வேகமாக செயல்பட்டுள்ளது. எந்த அரசாவது இந்தளவு வேகமாக செயல்பட்டுள்ளதா? ஸ்டாலின் அரசு உங்கள் அரசு. இது கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு. தனி மனிதர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு உள்ளது. கடந்த ஆட்சியில் மக்களிடம் கொள்ளையடிக்கும் ஆட்சியை பார்த்து இருப்பீர்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கும் ஆட்சியாக திமுக உள்ளது. கோவை நகரின் முக்கிய சாலைகள் குண்டும் குழியும் உள்ளது. தேர்தல் முடிந்ததும் சாலைகள் புதுப்பிக்கப்படும். பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மேம்பாலப் பணிகள் தேதி குறிப்பிட்டு முடிக்கப்படும். புதிய குடிநீர் இணைப்பு விரைவாக வழங்கப்படும். வீடு கட்ட எளிமையான வழிமுறை கையாளப்படும். வார்டு வாரியாக மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு வளர வேண்டும். மக்களின் குறைகள் குறைய வேண்டும் என்பது தான் ஆட்சியின் நோக்கம்.
ஒன்றிய அரசிடம் உரிமையை போராடி வாதாடி பெறும் அரசாக திமுக அரசாக உள்ளது. நீட் தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 மாணவர்களை இழந்துள்ளோம். நீட் தேர்விற்கு பல இலட்சம் பணம் கட்டி படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மாணவர்களால் படிக்க முடியாது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். செவ்வாய்க்கிழமை நீட் விலக்கு மசோதா வலிமையுடன் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும்.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 நீட் விலக்கு மசோதாக்களை, ஒன்றிய பாஜக அரசு கிடப்பில் போட்டது. குடியரசு தலைவர் நிராகரித்ததை சி.வி.சண்முகம் மூடி மறைத்து விட்டார். எதிர் கட்சி தலைவராக நான் கேள்வி கேட்டப்பட்ட போது, எந்த தகவலும் வரவில்லை என சி.வி.சண்முகம் சொன்னார். அமைச்சர் ஜெயக்குமார் குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்ப தான் முடியும். கேள்வி கேட்க முடியாது என்றார். மசோதா நிராகரித்தை அதிமுக அரசு வெட்கப்பட்டு மறைத்து விட்டது. நடு வீட்டில் திருடன் மாட்டியதை போல அதிமுக அரசு மாட்டிக் கொண்டது. பல ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டவர்கள், படித்தால் முன்னேறிவிடலாம். ஆனால் படிக்க வருவதை தடுக்கும் புதிய சூழ்ச்சி நீட் தேர்வு. மருத்துவ படிப்பில் சேர்வதால் மருத்துவராக முடியாது. மருத்துவ தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். நீட் தேர்வை மேலோட்டமான பார்க்க கூடாது. நீட் தேர்வை அரசியலுக்காக எதிர்க்கவில்லை. அரசியலுக்காக எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களுக்கு எதிராக பல திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
2017ம் ஆண்டில் அடிமை அதிமுக அரசு நீட் தேர்வை தலையாட்டி ஏற்றுக் கொண்டதே இவ்வளவு பிரச்சனைக்கு காரணம். நீட் எதிர்ப்பில் பின் வாங்க மாட்டோம். அதேபோல தமிழ்நாடு மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். மக்களை பற்றி நித்தமும் சிந்திக்கும் அரசு திமுக. விடியலில் வரும் வெளிச்சம் போல, உள்ளாட்சி தேர்தல் வெற்றி இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பொற்கால ஆட்சிக்கு மக்களின் பொன்னான வாக்குகள் வாரி வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.