திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடியினர்கள் 75 ஆண்டுகளில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். உடுமலைப்பேட்டையில் உள்ள 15 குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் நகரத்தின் மையத்தில் இருந்து தொலைதூரத்தில் இருப்பதால், ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாகத் தமிழ்நாடு மலைவாழ் பழங்குடியினர் நல சங்க திருப்பூர் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில்,“அவர்களால் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிக்க முடியும், ஆனால் சட்டச் சிக்கல்கள் காரணமாக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது. அவர்கள் வாக்குரிமை கோரியபோதெல்லாம் உள்ளூர் அதிகாரிகள் அவர்களது வசிப்பிடம் மலைகளிலும் காடுகளிலும் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினர். வனத்துறைக்கும் இதில் தெளிவு இல்லை, இதன் விளைவாக பல தசாப்தங்களாக அவர்கள் வாக்களிப்பதில் முட்டுக்கட்டை உண்டானது” என்கிறார் அவர்.


இதில் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தளி டவுன் பஞ்சாயத்தில் இரண்டு வார்டுகளை சேர்த்து இவர்களுக்கு வாக்குரிமை பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளது,“வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட 3,600 பேரில், நான்கு பகுதிகளைச் சேர்ந்த 613 பேர் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் தளி டவுன் பஞ்சாயத்துத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளார்கள்” என்கிறார் பழங்குடியினரின் உரிமைகளுக்காகக் கடந்த  20 ஆண்டுகளாகப் போராடி வரும் மதுசூதனன்.


பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்த உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  தளி டவுன் பஞ்சாயத்து எல்லையிலும், வன உரிமைகளிலும் இந்தப் பழங்குடியினரை சேர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் அவர்கள் கோரியதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார், "ஊராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 15ல் இருந்து 17ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வார்டுகளில் ஒன்றில் குருமலை, பூச்சக்கூத்தன்பாறை, மேல் சிறுமலை ஆகிய மூன்று குடியிருப்புகளும், மற்றொன்றில் திருமூர்த்தி மலைக் குடியிருப்பும் சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 11 குடியிருப்புகள் உள்ளாட்சி கிராமப்புறத் தேர்தலில் வாக்களிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.


திருமூர்த்தி மலை குடியிருப்பு பகுதியில் கடை நடத்தி வரும் என்.மணிகண்டன் கூறுகையில், ”நாங்கள் தீர்க்கப்பட வேண்டிய உள்ளூர் பிரச்னைகள் குறித்த பட்டியலை தற்போது தயாரித்து வருகிறோம். நாங்கள் இதுநாள் வரை கவுன்சிலர்களுக்கு வாக்களித்ததில்லை என்பதால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனால் எங்கள் சமூகத்தில் பெரியவர்கள் சிலரிடம் கலந்தாலோசித்த பிறகு தெளிவு கிடைத்துள்ளது” என அவர் கூறுகிறார்.


இந்தத் தொகுதியில் சிபிஎம் கட்சியின் பழங்குடியின வேட்பாளரான சி செல்வம் உள்ளாட்சியில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசுகையில், குடிநீர் மற்றும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்கிறார். "இவற்றை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால்தான் நிவர்த்தி செய்ய முடியும், ஆனால் உள்ளாட்சி அமைப்பு வரம்பில் நாங்கள் சேர்க்கப்படாததால் எங்களால் வாக்களிக்க முடியவில்லை. ஆனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கையின் மூலம் அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது” என அவர் கூறுகிறார்.