ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின், கோவை விமான நிலையம் வந்தார். மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.  அப்போது ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் கட்சி கொடியினை கையில் ஏந்தியபாறு நின்றும், மேளதாளம் முழங்கவும் வரவேற்பு அளித்தனர். 



இதனைத் தொடர்ந்து மறைந்த திமுக பிரமுகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். கோவை சாய்பாபா காலணி பகுதியில் உள்ள கோவை தங்கம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் கோவை தங்கம் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து கார் மூலம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் கார் மூலம் கிளம்பிச் சென்றார்.




கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் கோவை தங்கம். 73 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கிய போது அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு, கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் 2006 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு, அவர் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அவர், பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வால்பாறை தொகுதியில்  போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார்.



காங்கிரஸ் கட்சியில் இருந்து மீண்டும் ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த போது, கோவை தங்கம் அக்கட்சிக்கு சென்றார். தமாகா கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணி சார்பில் வால்பாறை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இதனால் அதிருப்தி அடைந்த கோவை தங்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த அக்டோபர் 12ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோவை தங்கம் உயிரிழந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண