கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தொன்மையான பாரம்பரியமும், தொழில் வளம் நிறைந்த கோவையில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. தொழில் துறையில் உணர்வு பூர்வமாக ஈடுபட்டு, கடின உழைப்பை மூலதனமாக வழங்கி, வேலை வாய்ப்பு வழங்கி இப்பகுதி செழிக்க உழைக்கும் தொழில் துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் நிறுவனம் நடத்துவதன் மூலம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பொருளாதார சேவையாற்றி வருகிறீர்கள். அது மேலும் செழிக்க வேண்டும். மக்கள் குணத்தால், மனத்தால் இதமான கோவைக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரம் கோவை. ஜவுளி, பொறியியல், மோட்டார், தங்கம், ஆபரண கற்கள் உற்பத்தி என அனைத்து தொழில்களும் சிறந்த நகரம் கோவை. ஒரு தொழில் என இல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக உள்ளது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை. தொட்டுத் துலங்காத துறையும் இல்லை.
கோவை வெட் கிரைண்டர்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையில் உள்ள டைடல் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உலகளவில் அவுட் சோர்சிங்க்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிக்கும் நகரமாக கோவை உள்ளது. இதுவரை நடந்த 5 முதலீட்டாளர் மாநாட்டில், ஒன்று கோவையில் நடந்தது.
கோவை மாநகர வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு விமான நிலைய விரிவாக்கம் அவசியம். கடந்த 10 ஆண்டுகளாக விரிவாக்க பணிகள் தொய்வு அடைந்திருந்தது. இப்பணிகளை விரைந்து முடிக்க தற்போது 1132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் சிறந்த பன்னாட்டு விமான நிலையமாக உயரத்தப்படும். வளம்மிக்க மாவட்டத்தை வலுப்படுத்த புத்தாக்கம், வான்வெளி, புதிய மையமாக, நியூ அப் ஃபார் இன்ஞனியரிங் டெக்னாலஜி மையமாக கோவை உருவாகும். இதற்காக தகுந்த நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கோவை மாநகர வளர்ச்சிக்காக புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா பாரதியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும். தொழில்துறை வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சிறந்து விளங்க வேண்டும். தமிழ்நாடு பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றி வரும் சிறு, குறு தொழில்கள் முன்னேற்றத்திற்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சொத்து பிணையில்லா கடன் வழங்க 100 கோடி ஒதுக்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோவையில் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கயிறு உற்பத்தியில் நாட்டில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோவையில் அமைக்கப்படும். ஈரோட்டில் மண்டல புத்தொழில் மையம் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில் சிப் தேவைகளுக்கு சீனா, தைவானை தேடுகின்றனர். எனவே சிப் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வான்வழி, பாதுகாப்பு உற்பத்தி மேற்கொள்ள சூலூரில் உற்பத்து பூங்கா அமைக்கப்படும். நூல் விலை உயர்வினால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலை இழக்கும் நிலை உள்ளது. நூல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தொழில் துறையினர் கவலைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு பல்முனை பொருளாதாரமாக மாற வேண்டும். போட்டிக நிறைந்த இந்த காலத்தில், மாற்றங்களை உள்வாங்க வேண்டும். எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும். அனைத்து தொழில் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் துறையினர் முயற்சிகளுக்கு அரசு உதவி செய்யும்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கோவை வ.உ.சி. மைதானத்தில் பொருநை கண்காட்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.