கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் - சித்தூர் இயக்குனர் குழுவின் தலைவரும், நாஸ்காம் அமைப்பின் ஐசிசி கவுன்சிலின் முன்னாள் தலைவருமாகிய பாலசுப்பிரமணியம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 1037 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், ”பாரதப் பிரதமரின் தலைமையில் ஆத்ம நிர்பர் திட்டத்தின் கீழ் இந்தியா உலக அளவில் முன்னோடி நாடாக சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், ஸ்கில் இந்தியா திட்டம் ஆகியவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் தொழில் முனைவோராகவும் அவர்களை உருவாக்கி வருகிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது இன்றைய தேவையாக உள்ளது. பட்டம் பெரும் இளைஞர்கள் கல்வியறிவு மட்டுமின்றி நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழக அரசும் மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை ஆவணம் பொது மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் உள்ளது. 65 பக்கங்கள் கொண்ட அதனை படித்துப் பார்த்தால் தமிழக அரசின் கல்விக் கொள்கையிலும், தேசிய கல்விக் கொள்கையிலும் ஒற்றுமை இருப்பது தெரியவரும். தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது.
மாநில அளவில் மட்டுமின்றி மாவட்ட அளவிலும் சிறந்த கல்வி முறைக்கான பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை பெற்று வருகிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். தேசம் முழுவதும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மிகவும் பிரபலமான கல்வி முறையாக இருந்து வருகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கை மேலும் தரமாக இருந்தால் அதன் நல்ல அம்சங்களை தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம். மத்திய கல்வித்துறை ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் சிறந்த கல்வி முறைகள் குறித்து பரிந்துரைக்க கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து உயர் கல்விகளையும் தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதை நாங்கள் அமல்படுத்தியும் உள்ளோம். 12 மாநில மொழிகளில் பொறியலுக்கான கேள்வி தாள்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு புத்தகங்கள் அனைத்தும் தமிழ் உட்பட 12 மாநில மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்