கோவை கார் வெடிப்பு வழக்கில் ஜமேசா முபினுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ் மற்றும் ரியாஸ் ஆகியோர் பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது மகன்கள் பெரோஷ், நிவாஸ் ஆகியோரை முபின் வீட்டை காலி செய்ய அனுப்பி வைத்ததாக பெரோஸ், நவாஸ் ஆகியோரின் தாயார் மைமுனாபேகம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பெரோஷ் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் இடையிலான செல்போன் உரையாடலும், ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஜூனைதா பேகம் இடையிலான செல்போன் உரையாடலும் வெளியாகியுள்ளது.
பெரோஸ் தனது நண்பர் ரியாஸ் உடன் பேசும் ஆடியோவில், பெரோஷ், ரியாஸை வீடு காலி செய்ய அழைப்பதும், வர மறுக்கும் ரியாஸை ஒரு நிமிடம் வந்துட்டு போ என்று சொல்லி அழைப்பதும் பதிவாகியுள்ளது. மற்றொரு ஆடியோவில் ரியாசின் தாயார் ஜூனைதா பேகம அழைக்கும் போது வீடு காலி செய்ய வந்திருப்பதாக ரியாஸ் சொல்கின்றார். மற்றொரு அழைப்பின் முபின் வீட்டில் வீடு காலி செய்து கொண்டு இருப்பதாகவும், சீக்கிரம் வந்து விடுவதாக தெரிவிக்கின்றார்.
ஜமேசா முபினுக்கு பெரொஷ், நவாஸ், ரியாஸ் ஆகிய மூவரும் வீட்டை காலி செய்து கொடுக்கவே சென்றனர் அவர்களது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியது. அக்காட்சிகள் அடிப்படையில் மூவரும் முபினுக்கு உதவியதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் முபின் வீட்டை காலி செய்ய வேண்டுமென அழைத்ததால் சென்று மாடியில் இருந்து பொருட்களை கொண்டு வந்து கொடுத்தாகவும், இவர்களுக்கும் அச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்