முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே தனது விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்து வருகிறார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்துள்ளார். 




இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்திற்கு பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விசிக உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பெரியார் படிப்பகம் முன்புள்ள பெரியார் சிலைக்கு பேரறிவாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் படிப்பகத்தில் அவருக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர். பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அற்புதம்மாள் கேக் வெட்டி பேரறிவாளனுக்கு ஊட்டி மகிழ்ந்தார். 




இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அற்புதம்மாள், ”இது 31 ஆண்டு கால போராட்டம். பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதை விட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய வேலை சாத்தியப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போராட்டத்திற்கு பலரும் உளப்பூர்வமாக ஒத்துழைப்பு தந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம். இது ஒரு அமைதி போராட்டம் என்றுதான் கூற வேண்டும். யாரையும் எதிர்க்கவில்லை. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தினால், பேரறிவாளன் சட்டத்தின் மூலம் விடுதலை ஆகியுள்ளார். அனைவரும் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார். 


பின்னர் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ”இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று 31 ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெற்ற பேரறிவாளன் மற்றும் அவருக்காக 31 ஆண்டு காலம் உழைத்த அவரது தாயாருக்கும் கோவைக்கு வருகை புரிந்துள்ளனர். மாநில உரிமைகளுக்கு விடிவு தேடி தந்தார்கள். பேரறிவாளன் விடுதலைக்காக அனைத்துக் கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் பாடுபடுவோம்” எனத் தெரிவித்தார். 




அதனை தொடர்ந்து பேசிய பேரறிவாளன், ”31 ஆண்டு கால நீதிக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. அதற்காக கு.ராமகிருட்டிணன் போராட்டங்களை நடத்தியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் உதவியாக இருந்துள்ளனர். எனது விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.