20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், ”சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து அரசு குழு அமைத்துள்ளது. வீதியில் நின்று மக்கள் போராடுவது தான் கருத்து. புழு கூட நகரும். அரசு அமைக்கும் குழுக்கள் எதுவும் செய்யாது.
என்னை பார்த்து பேசுங்க என காவல்துறையினர் சொல்கின்றனர். மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. சாதி வாரியாக, மதம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. மொழிவாரியாக தான் பிரிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களை தேசிய இனத்தின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும் மானமுள்ள தமிழன் திமுக ஒட்டு போட மாட்டான் என பழனி பாபா கூறியுள்ளார். ஆனால் போட்டு இருக்கின்றான். அப்படியெனில் மானம் இல்லை என அர்த்தம்.
மதத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இருப்பது ஏற்க முடியாது. ராஜீவ் கொலையாளிகளிக்கும், இஸ்லாமியர்களுக்கும் விடுவிக்காமல் இருப்பது சரியல்ல. தமிழக அரசு புரிந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை செய்யணும். இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எனக்கு வேறு வேலையும் இல்லை. டெல்லி போராட்டம் மாதிரி திருச்சியில் உட்கார்ந்துவிடுவேன். சிறைக்கதவை திறந்து அவர்களை விடு அல்லது எங்களை உள்ளேபோடு் என்று சொல்வோம். எங்களால் போராடத்தான் முடியும். விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை. ஸ்டாலின் நீங்க பயப்படுகிறீர்கள். எதுக்கு பயப்படுகிறீர்கள். பா.ஜ.கவினர் கத்துவாங்க. அவங்களை நாங்க பார்த்துக்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நான் ஓட்டுக்கானவன் கிடையாது. உரிமைக்கானவன், உறவுக்கானவன். எனக்கு எந்த பிரதிபலனும் இல்லை. தமிழக முதல்வர் மதத்தை பார்க்காமல் மனிதத்தை பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். 7 தமிழர்களை விடுவிப்பதில் என்ன பிரச்சினை? ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்?
அர்ஜீன் படத்தில் வருவதைப்போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வராக்குங்கள். எல்லாத்தையும் செய்து விட்டு விலகிக்குறேன். முதல்வர் துணிந்து முடிவு எடுக்கவேண்டும். இஸ்லாமியர் என்பதை காரணம் காட்டி விடுதலை செய்யாமல் இருப்பதை ஏற்க முடியாது. அரசு அமைத்த குழு நியாயமான முடிவை முன் வைக்கும் என எதிர்பார்க்கின்றேன். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்” என அவர் தெரிவித்தார்.