ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏடிபி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சுங்கம் பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலர் சட்டையை கழட்டி அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பணிமனை முன்பாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என தொழிற்சங்கங்க நிர்வாகிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இன்னும் கால அவகாசம் வழங்க முடியாது என அந்த வேண்டுகோளை தொழிற்சங்கங்கள் நிராகரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையிலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம், சாய்பாபாகாலணி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பணிமணிகளில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பணிமணிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.