பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற 16 ம் தேதி சென்னையில் பாஜக அலுவலகமான கமலாயத்தில் அண்ணாமலை மாநிலத் தலைவராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்காக கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை மார்க்கமாக பேரணியாக செல்கிறார். இப்பேரணி கோவை வ.உ.சி. மைதானம் முன்பு இன்று தொடங்கியது. பேரணியாக சென்னை புறப்பட்ட அண்ணாமலைக்கு வ.உ.சி. மைதானம் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்ணாமலை தனது சொந்த மாவட்டமான கரூரில் இருந்து பேரணி செல்லாமல், கோவையில் இருந்து பேரணியை துவக்கியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வேட்பாளராக களம் இறங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் இடையே பேச்சு எழுந்துள்ளது.
அதற்கேற்ப வ.உ.சி. மைதானம் முன்பு தொண்டர்களிடையே பேசிய அண்ணாமலை, “கோவை பாஜகவின் இரும்பு கோட்டை. அசைக்க முடியாத கோட்டை. நமது பயணம் என்பது பாஜக கட்சிக்கான பயணம். 3 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வரும் போது, நிச்சயமாக தமிழகத்தில் பாஜக முக்கியமான மாற்று சக்தியாக இருக்கும். அதிகளவு எம்.பி.க்கள் இங்கிருந்து பாராளுமன்றத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறார்.
பாஜகவை பொறுத்தவரை தலைவன் என்ற வார்த்தை இல்லை. சேவகன் மட்டுமே. உங்களுக்கு சேவை செய்ய சென்னை செல்கிறேன். கோவை நாட்டுக்கு பல உயிர்களை கொடுத்த ஊர். பாஜக ஆட்சியமைக்கவும், எம்.எல்.ஏ, எம்.பிக்களை தரவும் கோவை காத்திருக்கிறது. இது ஆரம்பம் மட்டும் தான். முடிவு அல்ல. கட்சியை வீடு வீடாக கொண்டு செல்வோம். பிரதம மந்திரி நரேந்திர மோடியின் கொள்கைகளை ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்போம். மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஊர் கூடி தேர் இழுப்போம். கடுமையாக உழைப்போம். கட்சியை வளர்ப்போம்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜகவினரிடம் கேட்ட போது, “கோவை பாஜக வலுவாக உள்ள பகுதி. ஏற்கனவே இரண்டு முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அதற்கு அடுத்து போட்டியிட்ட 3 தேர்தல்களிலும் தோல்வியை தழுவினார். மக்களிடயே அவருக்கு செல்வாக்கு குறைவு. கோவையில் கட்சி பணிகளிலும் பெரியளவில் ஈடுபடுவதில்லை. அதுமட்டுமின்றி உட்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் உள்ளன. 2014 தேர்தலில் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட போது, வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டங்கள் நடந்தன. எனவே மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறைவு தான்.
கோவையில் பாஜக முகமாக உள்ள வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புகள் அதிகம். பாஜகவிற்கும் வாக்கு வங்கி பலமாக உள்ளது. கோவை மக்களிடம் அண்ணாமலைக்கு நல்ல அறிமுகம் உள்ளது. அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தலைவராக உள்ளார். மற்ற பகுதிகளை காட்டிலும் கோவை தொகுதி அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதி. அதற்கேற்ப பணிகளை செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
கோவை மக்களவை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும், பெரும்பாலும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்குவதே வழக்கம். மக்கள் நீதி மய்யத்தில் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்தவர். அண்மையில் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கோவையில் திமுகவின் முகமாக அடையாளம் காட்ட பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. எனவே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கோவை தொகுதியை ஒதுக்கவில்லை எனில், அண்ணாமலையும், மகேந்திரனும் நேரடியாக மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.