கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சியில் நலத் திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களை கெளரவித்தனர்.


இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”முத்ரா கடன் இத்திட்டத்தின் மூலம் பல்வேறு தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக 5 கோடியே 50 லட்சம் கழிப்பறைகள் தான் இந்தியாவில் கட்டப்பட்டு இருந்தது. மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் 8 ஆண்டு கால ஆட்சியில் 11 கோடியே 23 லட்சம் பேருக்கு கழிப்பறைகள் கட்டி தரப்பட்டுள்ளது.


மின்சாரம் இல்லாத கிராமம் இந்தியாவில் இல்லை


தற்போது மின்சாரம் இல்லாத கிராமம் இந்தியாவிலேயே இல்லை. இதில் நாம் பெருமைப்பட வேண்டும். 67 சதவிகிதமாக இருந்த எல்பிஜி பயன்பாட்டாளர்கள், தற்பொழுது 99.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023ல் இந்தியாவின் கடைசி மனிதனுக்குக் கூட வீடு இருக்கும்” எனத் தெரிவித்தார். 


அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், ”பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஏழை மக்களுக்குக்கான நலத் திட்டங்கள் மூலம் மக்களை முன்னேற்றியுள்ளார். கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியது. தொழில்நுட்பங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் முழுமையான பலன்கள் பயனாளிகளுக்கு செல்கிறது.




உக்ரைன் ரஷ்யா போரில் சிக்கிக் கொண்ட 22 ஆயிரம் மாணவர்களை காப்பாற்ற மோடி தலைமையிலான அரசு, அமெரிக்க ரஷ்ய அரசு அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்தது. மத்திய அரசு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை ஒழித்து வருகிறது. கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் கேரள கம்யூனிஸ்ட் செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை. கேரள அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்து நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறது. கேரள மாநில முதல்வர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் உள்ள முக்கியக் குற்றவாளி தெரிவித்தும், தமிழக காங்கிரஸ் தலைவர் அது குறித்து பேசவில்லை.


’முதல்வரை எதிர்த்து பதிவிட்டால் கைது’


தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால் இரவு 2 மணிக்கு கைது நடவடிக்கை நடத்தப்பட்டு, குண்டர் சட்டம் போடுகிறது. தமிழக அரசு காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது. அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 




மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிப்பதற்கு காவேரி நீர் மேலாண்மைக்கு அங்கீகாரம் கிடையாது. மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பிக்கலாமே தவிர, அரசு மாறும்பொழுது முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான். கேரள முதலமைச்சருக்கு ’தங்க கடத்தல்காரர்’ என அவர்களது மக்களே பெயர் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் எந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேசுவதற்கு முகாந்திரம் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியில் தஞ்சம் அடைந்துள்ளது.


உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை


கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளது. சீரடிக்கு கோவையிலிருந்து தனியார் ரயில் சேவை மட்டுமின்றி, அரசு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் செல்வது மக்களின் விருப்பம். இதில் தவறு என சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக என்றும் தலையிடாது.ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அவர்களே நல்ல முடிவை எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.