கோவை அருகே பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவது வழக்கம். இதனிடையே கோடை காலம் துவங்கியதால் வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, காட்டு யானைகள் கிராமப்பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாய்க்கன்பாளையம் கிராமத்திற்கு அருகேயுள்ள தடாகம் காப்புக்காட்டில் இருந்து குட்டியுடன் ஒரு தாய் யானை வெளியே வந்துள்ளது. வன எல்லையில் இருந்து சுமார் 180 மீட்டர் தொலைவில் நாய்க்கன்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட அபராஜிதா (நடிகர் சத்யராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திற்குள் இரண்டு யானைகளும் சென்றுள்ளது. அப்போது அந்த தோட்டத்து வீட்டின், கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில், எதிர்பாராத விதமாக யானைக் குட்டி விழுந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் இருந்து வெளியே வர முடியாமல், தண்ணீரில் மூழ்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றத்தின் மூலம் குட்டி யானை, தொட்டியில் விழுந்து உயிரிழந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக்குழுவினர் விசாரணை செய்தனர். மேலும் தண்ணீர் தொட்டிக்குள் மிதந்து கொண்டிருந்த உயிரிழந்த குட்டி யானையின் உடலை இருந்து மீட்ட வனத்துறையினர், உடலைக் கைப்பற்றி குட்டி யானை எப்படி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை காலை உயிரிழந்த குட்டி யானைக்கு உடற்கூராய்வு செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இறந்து குட்டி யானையின் தாய், அந்த தோட்டத்திற்கு அருகில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது. காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். யானைகள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்