பாஜக மகளிரணி மாநில மகளிரணிச் செயலாளராக மைதிலி வினோ என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். அதே சமயம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக மைதிலி வினோவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மைதிலி வினோ தனது முகநூலில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், ”பாரதிய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜகவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்தேன். 


 



மைதிலி வினோ


அதைத் தொடர்ந்து தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்து, திமுகவில் இணையும் முடிவுக்கு வந்தேன். ஆனால் இன்று கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாலும் என்னை கட்சியை விட்டு நீக்குவதாக தாங்கள் அறிக்கை விட்டுள்ளீர்கள். நான் என்ன களங்கம் விளைவித்தேன் என்பதை தங்களால் கூற முடியுமா?களங்காமல் கட்சிக்காக உழைத்து வந்ததால் இதனை கூறியுள்ளீர்களா?


பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உணமையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும். என்னை போன்று கட்சிக்காக உழைத்து, இன்று மாவட்ட தலைமையால் புறக்கணிக்கப்பட்டுள்ளவர்கள் ஏராளமாக உள்ளனர். பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள்  அறியாததே. 


ஏனென்றால் தாங்கள் பாஜகவிற்கு புதியவர். அதிலும் வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால், நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு?




கட்சியின் செயல்பாடுகள் உண்மை தொண்டனுக்கு தெரிவதில்லை. கட்சியின் ஆர்ப்பாட்டம் போராட்டங்களுக்கு கட்சியினருக்கு தகவலளிக்காமல் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறீர்கள். உண்மையான பாஜகவினர் தகவல் வராமல் வீட்டிலிருக்கும் போது பாஜக நிகழ்ச்சிகளில் கூலிக்கு வருபவர்கள் நின்றிருக்கிறார்கள். இதை கேட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை. 


தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின்  செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருவதோடு, பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி ஏபிபி நாடுவிற்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “மைதிலி சொல்வது போல எனக்கு 310 கோடி ரூபாய் சொத்து இல்லை. நான் அவரை விட கட்சியில் சீனியர். 1989 ம் ஆண்டு முதல் பாஜகவில் உள்ளேன். இது பாஜக மூத்த உறுப்பினர்களுக்கு தெரியும்.


நான் காசு கொடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை அழைத்து வருகிறேன் என்றால், இதற்கு முன்பு எப்படி ஆட்களை அழைத்து வந்தார்கள்? மாற்றுக்கட்சிக்கு செல்வதற்காக தவறான குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார். வேறு கட்சிக்கு செல்வது என்பது அவரது விருப்பம். பாஜகவின் தொண்டர்களை திமுகவினர் விலை பேசி வருகின்றனர். அவர் எவ்வளவு பணத்திற்கு விலை போனார்? பாஜகவில் இருந்து ஒருவர் வெளியேறினால் நூறு பேர் வரத் தயாராக உள்ளனர்” என்றார்.