இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 


`கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து சாய்நகர் ஷிர்டி செல்லும் பாரத் கௌரவ் ரயில் ஜூன் 14 அன்று மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, ஜூன் 16 அன்று காலை 7.25 மணிக்கு சாய்நகர் ஷிர்டி சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா, தர்மவரம், மந்திராலயம் சாலை, வாடி முதலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


மேலும், முதன்முதலான இந்த ரயில் புறப்பட்ட போது, அதில் சுமார் 1100 பேர் பயணித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 



பாரத் கௌரவ் ரயில் சேவையைத் தனியார் சேவை நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான இந்தத் திட்டத்தின் கோவை முதல் ஷிர்டி வரை செல்வதையும், மீண்டும் திரும்பி வருவதையும் சேர்த்து முழுவதுமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. 


இந்த ரயிலை சௌத் ஸ்டார் ரயில் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டஸ் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெற்கு ரயில்வேயிற்கு 1 கோடி ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக வழங்கியுள்ளதோடு, 20 பெட்டிகள் கொண்ட ரயிலைப் பெற்றுள்ளது. 


மத்திய ரயில்வே துறை இதுகுறித்து கூறிய போது, `ரயிலைப் பயன்படுத்த வருடாந்திர கட்டணமாக இந்த ரயில் 27.79 லட்சம் ரூபாய் தொகையையும், கூடுதலாக காலாண்டு பயணக் கட்டணமாக 76.77 லட்சம் ரூபாய் தொகையையும் கட்டணமாக செலுத்தியுள்ளது. மேலும், தற்போதைய பயணத்திற்கான கட்டணமாக 38.22 லட்சம் ரூபாய் பணத்தையும் செலுத்தியுள்ளது. இதில் ஜி.எஸ்.டி தனியாக சேர்க்கப்படும்’ எனக் கூறியுள்ளது. 



இந்த ரயில் ஒரு முதல் அடுக்கு ஏசி கோச், மூன்று 2-அடுக்கு ஏசி கோச்கள், 8 3-அடுக்கு ஏசி கோச்கள், 5 ஸ்லீப்பர் கோச்கள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 






`ரயிலை நடத்தும் தனியார் நிறுவனம் ரயிலின் உள்பகுதிகளை மீண்டும் வடிவமைத்துள்ளனர். மேலும், அவ்வபோது நேரத்திற்கு சுத்தம் செய்யும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சேவைகளை வழங்கும் பணியாளர்கள் இருப்பதால் இது சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காகவும், பக்திப் பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை ஒளிபரப்புவதற்காகவும் அனைத்து பெட்டிகளிலும் பொது ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயணக் கட்டணம் கோவை முதல் ஷிர்டி செல்வதற்கும், மீண்டும் திரும்பி வருவதற்கும் மட்டுமின்றி, விஐபி தரிசனம், பேருந்து சேவை, ஏசியுடன் கூடிய தங்கும் வசதி, பயணத்திற்கான வழிகாட்டி சேவை எனப் பலவற்றை வழங்குகிறது’ என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.


ரயில்வே காவல்துறை இருப்பதோடு, அவசர காலங்களில் உதவுவதற்காக இந்த ரயிலில் மருத்துவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 


கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள வரலாற்றுத் தலங்களை இணைக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே.