நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், வளர்ப்பு யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. முதுமலை யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 16 வயதான மசினி என்ற யானையை, பாலன் (54) என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில் இன்று அபயாரண்யம் யானையின் முகாமில் மசினி யானைக்கு உணவளிக்க சென்ற போது, பாகன் பாலனை திடீரென மசினி யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த பாகன் பாலம் சம்வப இடத்திலேயே உயிரிழந்தார். 


இதனைத்தொடர்ந்து பாகன் பாலனின் உடலை மீட்ட வனத்துறையினர், உடற்கூராய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானைகள் முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு யானை தாக்கியதில் யானை பாகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கஜேந்திரன் என்ற யானை பாகன், கடந்த 2018 ஆம் ஆண்டு மசினி யானை தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


 



பாலன்


மசினி யானை


கடந்த 2007 ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தவித்து வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது கார்குடி மசினியம்மன் கோயில் அருகே, குட்டியானை ஒன்று மயக்க நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு வந்து சிகிச்சையளித்தனர். முதுமலை பழங்குடி மக்களின் குலதெய்வமான மசினியம்மன் கோயில் அருகே குட்டி யானை மீட்கப்பட்டதால், அந்த யானைக் குட்டிக்கு மசினி எனப் பெயர் சூட்டப்பட்டது.


பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், மசினிக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு, கடந்த 2016 ம் ஆண்டு திருச்சி சமயபுரம் கோயிலுக்கு மசினி லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்ற மசினி யானையின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன. முதுமலையில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மசினி, சமயபுரம் கோயிலில் மிக இறுக்கமாகவே காணப்பட்டு வந்தது. இதனிடையே கோயில் வளாகத்துக்குள் பாகன் கஜேந்திரனைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் அந்த யானை பக்தர்களையும் விரட்டத் தொடங்கியது. 


இதையடுத்து கோயிலின் கதவுகள் பூட்டப்பட்டு பிற கோயில் யானைப் பாகன்கள் வரவழைக்கப்பட்டு, அந்த யானையின் கால்களில் இரும்புச் சங்கிலியுடன் பிணைத்தனர். பின்னர் மசினி யானை ஓரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மசினி உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமலும், படுத்து எழமுடியாமலும் தவித்து வந்தது. இந்த யானையை முதுமலை முகாமுக்கு மீண்டும் அழைத்துச் செல்லக்கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின் என்பவர், உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மசினி யானையை முதுமலைக்கே கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மிக மோசமான நிலையில் முதுமலைக்குக் கொண்டுவரப்பட்ட வனத்துறையினரின் தொடர் கவனிப்பால் இயல்புக்கு திரும்பியது. இந்த நிலையில் மசினி யானை தாக்கியதில் பாகன் பாலன் உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.